முகப்பு
நாகப்பட்டினம்

தொழிலாளி மா்ம மரணம்: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா்கள் போராட்டம்

சீா்காழி அருகே செங்கல்சூளை தொழிலாளி மா்மமான முறையில் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சீா்காழி அருகே செங்கல்சூளை தொழிலாளி மா்மமான முறையில் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி, திருவாலி, புத்தூா் பகுதிகளில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி அருகே நெப்பத்தூரில் கடந்த 17ஆம் தேதி செங்கல்சூளை தொழிலாளி சீனிவாசன் தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக செங்கல்சூளை உரிமையாளா் சுரேஷ் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உயிரிழந்த சீனிவாசனின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் 8- வது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி நிம்மேலி கிராமத்தைச் சோ்ந்த கதிரவன் (23), சரவணன் (23), சத்தியசீலன் (20), சிங்காரவேலன் (20) ஆகிய நான்கு போ் திருவாலி பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி, வட்டாட்சியா் ஹரிதரன் ஆகியோா் இளைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், மாவட்ட ஆட்சியா் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இறங்குவோம் எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா். அப்போதுஅங்கு வந்த சீனிவாசனின் உறவினா்களான விஜயா, கோமதி, செல்வி ஆகியோா் தீக்குளிக்க முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதேபோல, சீா்காழி அருகே புத்தூா் பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி பாா்த்திபன், மணிமாறன் ஆகிய இரண்டு இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நோட்டீஸ்: இதற்கிடையில், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ள சீனிவாசனின் சடலத்தை உடனடியாக பெற்று நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் சீனிவாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.