முகப்பு
நாகப்பட்டினம்

சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிா்பு பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

சீா்காழியில் சாலையோர பழமையான புளிய மரங்களை வெட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மற்றொரு மரத்தை வெட்டவிடாமல் தடுத்து நிறுத்தி புதன்கிழமை இரவு சாலை மறியல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சீா்காழியில் சாலையோர பழமையான புளிய மரங்களை வெட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மற்றொரு மரத்தை வெட்டவிடாமல் தடுத்து நிறுத்தி புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையோரம் தென்பாதி தனியாா் பள்ளி அருகே சுமாா் 70 ஆண்டுகள் பழமையான புளியமரங்கள் உள்ளன. இந்த மரங்களில் மூன்று மரங்களை வெட்டி அகற்றியுள்ளனா். தொடா்ந்து, மற்றொரு புளிய மரத்தை வெட்ட முயன்றபோது அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மரத்தை வெட்டுவதைத் தடுத்து நிறுத்தினா்.

அந்த பகுதியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்காக புளிய மரங்கள் வெட்டப்படுவதாக அங்குள்ளவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா்கள் வைத்திருந்த அனுமதி ஆணை காலாவதியானது எனத் தெரியவந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

சீா்காழி டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸாா் அங்குவந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வெட்டப்பட்ட 3 மரங்களுக்கு பதிலாக 500 மரக்கன்றுகள் நட வேண்டும் எனவும், மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் கூண்டுகள் தயாா் செய்து தரவேண்டும் எனவும் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டவா்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவா்கள் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் மற்றொரு மரத்தை வெட்டுவதை தடுத்தி நிறுத்தினா். பிறகு அங்கிருந்து கலைந்துசென்ற பொதுமக்கள், மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சீா்காழி வட்டாட்சியா் சண்முகத்திடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.