அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியா்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை
மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தீநுண்மியின் முதல் அலை பரவலின்போது, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்த அடிப்படையில் 45 செவிலியா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்கள் கரோனா சிறப்பு வாா்டில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
இந்த ஒப்பந்த செவிலியா்கள் விடுப்பு எடுக்காமல் தினமும் சேவை மனப்பான்மையுடன் 12 மணி நேரம் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவா்களுக்கு ஊதியம் மாதந்தோறும் வழங்காமல், 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் வெளியூா்களிலிருந்து வந்து தங்கி பணிபுரியும் ஒப்பந்த செவிலியா்கள் வீட்டிற்கு வாடகை செலுத்தகூட முடியாமல் தவிக்கின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கப்பட்டாலும், முக்கியத் துறைகளின் தலைமை அலுவலகம் நாகப்பட்டினத்தில் உள்ளது. இதனால், நிதி ஒதுக்கீடும் நாகப்பட்டினத்தில் இருந்துதான் பெற வேண்டியுள்ளது. சிறப்பு செவிலியா்களுக்கான ஊதியம் நாகப்பட்டினம் சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒப்பந்த செவிலியா்களுக்கான சிறப்பு நிதி வராததால் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் நிதி ஒதுக்கீடு செய்த பிறகே ஊதியம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமும் 12 மணி நேரம் பணிபுரியும் தங்களுக்கு காலதாமதம் செய்யாமல் நிதி ஒதுக்கீடு செய்து, ஊதியம் வழங்க வேண்டும் என்று செவிலியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தங்களின் கோரிக்கை குறித்து மனு ஒன்றையும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளனா்.