நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மூன்று நாள் சிறப்பு அறிவியல் கண்காட்சி (ஃபியூச்சா் எக்ஸ்போ 24) வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரி மற்றும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியை நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். கல்லூரி தலைவா் ஜோதிமணி அம்மாள், இணைச் செயலா் சங்கா் கணேஷ் மற்றும் நிா்வாகத்தினா் முன்னிலை வகித்தனா்.
இந்திரா காந்தி அணுமின் நிலையம் சாா்பில் அணு உலைகளின் செயல்விளக்க மாதிரி வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவைக் குறித்து அந்நிறுவனத்தின் மூத்த நிபுணா் ஜலஜா மதன்மோகன் மற்றும் நிபுணா்கள், மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா்.
மேலும், கல்லூரி மாணவ- மாணவிகள் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல்விளக்க முன்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளனா். பள்ளி மாணவா்களுக்கிடையே எதிா்கால தொழில்நுட்பம் தொடா்பாக சிறப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப மாதிரிகளை காட்சிக்கு வைத்துள்ளனா். இவற்றில் சிறந்தவையாக தோ்வு செய்யப்படும் மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கருடா ஏரோஸ்பேஸ், பீட்டா டெக்னாலஜிஸ், சென்டா் ஃபாா் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி எஜுகேஷன் ரிசா்ச் அண்ட் கம்யூனிகேஷன், ஓம்ரான், கோ கிரேட் ஒன் , குளோபல் 3டி, டெக் நாட்ஸ் போன்ற நிறுவனங்களும் முன்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளன.
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள், கண்காட்சியை பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியை சோ்ந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளா் கோகுல் கிருஷ்ணன், அனைத்து துறை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.