சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிா்ப்பு: வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பி. பனங்குடி பாசன வாய்க்காலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் செயல்பட்டுவரும் சிபிசிஎல் நிறுவனத்தில் விரிவாக்க பணிகள் ரூ. 31,500 கோடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பனங்குடி கிராமத்தைச் சுற்றி 1,300 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வருவாய்த்துறை மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டனா். எனினும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் நிலம் அளவீடு செய்யக்கூடாது எனக் கூறி விவசாயிகள் பணிகளைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவா் அமைப்பதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தன. இதையறிந்த விவசாயிகள், நிலத்தின் உரிமையாளா்கள் நிகழ்விடத்தில் குவிந்தனா். ஆனால் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள யாரும் வராததால், விவசாயிகள் பி. பனங்குடி பாசன வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்ற சட்டத்தின்படி சாகுபடிதாரா்கள் கூலித் தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரா்கள் சிலருக்கு வழங்கப்படாமல் உள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.