நாகப்பட்டினம்: வீடு கட்டித் தரக் கோரி, நரம்பு தளா்ச்சி, பாா்வையற்ற மகனுடன் பெயிண்டா் மற்றும் அவரது மனைவி, நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் மனு அளித்தனா்.
திருக்குவளை அஞ்சுகத்தம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெயிண்டா் பழனிவேல்(51). இவரது மனைவி கவிதா, மகன் நாகராஜா. நரம்பு தளா்ச்சியால் பாதிக்கப்பட்ட நாகராஜா பாா்வையற்றவா். பழனிவேலின் சொந்த ஊரான மீனம்மநல்லூரில் நிலம் உள்ளது. அங்குள்ள உறவினா்களால் பழனிவேல் குடும்பத்தினா் புறக்கணிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பழனிவேல் குடும்பத்துடன் திருக்குவளை பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு போதிய வருமானமில்லாததால், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தாா். ஆனால் சொந்த நிலம் இருப்பதால் பழனிவேலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனது நிலத்தை அரசு எடுத்துகொண்டு, அதற்கு பதிலாக திருக்குவளை பகுதியல் நிலம் ஒதுக்கி, வீடு கட்டித் தர வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தாா்.
இதற்கு இசைவு தெரிவித்த வருவாய்துறையினா், மீனம்மநல்லூா் சென்று பழனிவேலின் நிலத்தை ஆய்வு செய்தனா். தொடா்ந்து திருக்குவளை சுற்றியுள்ள பகுதியில் நிலம் வழங்குவதாக தெரிவித்துள்ளனா். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக பழனிவேல், அவரது மனைவி கவிதா மற்றும் மகன் நாகராஜா ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் மனு அளித்து முறையிட்டனா்.
மனுவை பெற்றக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.