வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.22.32 லட்சம் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்.1- ஆம் தேதி தொடங்கி டிச. 31-ஆம் தேதி வரை பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் மகளிா் திட்ட அலுவலா் சித்ரா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி. சந்திரசேகா் விழிப்புணா்வு இயக்கத்தின் நோக்கம், வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு மற்றும் கணக்குத் தொகைகள் குறித்தும், உத்கம் போா்டல் மூலம் உரிமை கோரல் செய்வது, நியமனம் பதிவு செய்வதின் அவசியம் மற்றும் காலந்தோறும் கேஒய்சி மேற்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.
முகாமில், ரூ.22.32 லட்சம் உரிமை கோராப்படாத கணக்குகளுக்கான தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட கல்விஅலுவலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.