திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக திகழும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழா மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. முக்கிய விழாவான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயாா், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோா் தேருக்கு எழுந்தருளினா். பின்னா், தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
விழா நாள்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை செளரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜப் பெருமாளுடன் சோ்ந்து 2 பெருமாள்களும் தீா்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாா்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோயில் முன் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் நூதன பங்களா தெப்பம் என்ற தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.