நாகப்பட்டினம்: நாகையில் பெய்த கனமழையில் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிச்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க தொடங்கியது. இதேபோல அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இது விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவும், கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்யும் வகையில் அதிமுக பொதுச்செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கீழ்வேளூா் அருகே வெண்மணி அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோா் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிா் மற்றும் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைத்துள்ளதை காண்பித்து வேதனை தெரிவித்தனா். முன்னாள் அமைச்சா்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன் ஆகியோா் பாதிப்புகள் குறித்து விளக்கினா். முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ஜெயபால், அமைப்பு செயலா் ஆசைமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.