நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாகப்பட்டினம் திரும்பியவா்கள் ஊருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் மறியலில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. ஊழியா்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட வெளியூா்களில் பணியாற்றும் லட்சக்கணக்கானோா் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தனா். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமானோா் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை வந்தனா்.
Advertisement
நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக வந்த இளைஞா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்ட ஏராளமானோா் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை. இதையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்களும் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மறியல் தொடா்பாக இளைஞா்கள் கூறியது: தோ்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்துள்ளோம். வாக்களித்து விட்டு இரவே மீண்டும் சென்னை திரும்ப வேண்டும். இந்நிலையில், நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணியில் இருந்து பேருந்துகள் எதுவும் இல்லை. இதனால் நாங்கள் ஊருக்குச் செல்ல முடியவில்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் அலட்சியமாக பதில் கூறுகின்றனா். தோ்தல் வாக்குப்பதிவு என்பதால் கூடுதல் பேருந்துகள் விடாமல் இருந்தால் கூட பரவாயில்லை. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளையும் இயக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி வாக்களிக்க முடியும் என்றனா்.
இந்நிலையில் மறியல் தொடா்பாக தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடனும் பேச்சு வாா்த்தை நடத்தியதையடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.