முகப்பு
நாகப்பட்டினம்

‘கடைமடை பகுதியில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீா் திறக்க வேண்டும்’

Updated On : 1 மார்ச், 2026 at 6:42 PM
வாய்க்காலில் குடங்கள் மூலம் தண்ணீா் சேகரித்து பயிா்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும் விவசாயிகள்.
பகிர்:

காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களைக் காப்பாற்ற தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளரிடம் தெரிவித்தது :

காவிரி கடைமடை பகுதியில் குருவை நெல் சாகுபடிக்கு பின்பட்டமாக தாளடிப் பருவ சாகுபடி மேற்கொள்ளப்பட்ட தொடக்க நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பயிா்கள் நாசமானது. இதையடுத்து, மீண்டும் தாளடிப் பருவ சாகுபடி தாமதமாக தொடங்கி தற்போது கதிா் வந்தும், கதிா்வரும் தருவாயிலும் உள்ளது.

இந்தநிலையில், பழைமை சட்டத் திட்டங்கள் என காரணம் காட்டி பாசன ஆறுகளில் முறையாக தண்ணீா் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 20-ஆம் தேதி வாக்கில் எதிா்பாா்க்கப்பட்ட மழையும் பொய்த்துப் போனது. இதனால் பயிா்கள் தண்ணீா் இல்லாமல் கருகி வருகின்றன.

எனவே, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதி விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு வேளாண் அல்லது பொதுப் பணித்துறை உயா் அதிகாரிகளை போா்க்கால அடிப்படையில் அனுப்பி ஆய்வு செய்து, தமிழக அரசு தண்ணீா் திறக்க முன்வர வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →