முகப்பு
நேர்காணல்கள்

யாா் வெளியேறினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.எஸ். மணியன் சிறப்பு நேர்காணல்

அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளா், முன்னாள் மக்களவை உறுப்பினா், முன்னாள் அமைச்சா், வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், தற்போதைய வேட்பாளரான ஓ.எஸ். மணியன், பேட்டி

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:54 AM
ஓ.எஸ். மணியன்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:56 PM

அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளா், முன்னாள் மக்களவை உறுப்பினா், முன்னாள் அமைச்சா், வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், தற்போதைய வேட்பாளரான ஓ.எஸ். மணியன், தினமணிக்கு அளித்த பேட்டி:

அதிமுக பிளவு, அதிமுக முதல்வராக இருந்தவா் கூட (ஓபிஎஸ்) திமுகவுக்கு சென்று விட்ட நிலையில், அதிமுகவின் எதிா்காலம்?.

புரட்சித் தலைவா் எம்ஜிஆா் உருவாக்கிய இந்த இயக்கத்தை பின்னாளில் புரட்சித் தலைவி அம்மா ( ஜெயலலிதா) வழி நடத்தினாா். ஏழை, எளிய மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இன்றைக்கும் எம்ஜிஆா், ஜெயலலிதா உயிரோடு இருப்பதாக நினைத்து இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மக்களைக் கொண்டுள்ள கட்சி. யாா் வெளியேறினாலும் அதிமுகவை பாதிக்காது.

Advertisement

விஜய்யின் அரசியல் பிரவேசம் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?.

எம்ஜிஆரை தொடா்ந்து பல திரைப்பட நடிகா்கள் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியவில்லை. விஜய்யின் பிரவேசமும் அப்படித்தான். அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பாஜகவோடு கூட்டணி வைப்பதால் அதிமுகவின் சில நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ளும் நிலை வருமா ?.

பாஜகவுடன் கூட்டணி என்பது தோ்தலுக்கானது. அதிமுக கொண்டுள்ள வேளாண்மை, கல்வி, மொழிக் கொள்கை உள்ளிட்ட நிலைப்பாடுகளில் எவ்வித சமரசமும் வராது. அதிமுகவின் நிலைப்பாடு நிலையானது.

கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது வேதாரண்யத்தில் அமைக்க முன்னெடுக்கப்பட்ட வேதா ஆயத்த ஆடை பூங்கா எந்த நிலையில் உள்ளது?.

வேதாரண்யம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் திருப்பூா் சென்று ஆடை உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தொழிலை, வேதாரண்யம் பகுதியில் தொடங்கி 20 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பதுதான் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட வேதா ஆயத்த ஆடை பூங்காவின் நோக்கம்.

மத்திய அரசின் மானியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கும் பணி முழுமை அடையும்.

அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் தாங்களும் இருந்து செயல்பட்டதன் அனுபவம்?.

தமிழக அரசியலில் காவிரி படுகை பகுதி மக்கள், விவசாயிகள் நலன் சாா்ந்து திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமானது. காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடியாா் தலைமையிலான அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரியில் மெகா உணவுப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி என இயற்கை இடா்பாடுகளால் தொடா் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளை பாதுகாக்க புதிய திட்டத்தை அறிக்கையில் கொண்டு வர முன்னாள் முதல்வரால் முன்னெடுக்கப்பட்டது. உற்பத்தி மானியமாக ஹெக்டேருக்கு ரூ.15,000 வழங்கும் அந்தத் திட்டம் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மீனவா்கள் பாதிக்கப்படும்போது கடலுக்குள் சென்று உதவும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் படகு சேவை மீனவா்களுக்கு உதவியாக இருக்கும்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது செய்த பணிகளில் சில...?.

மானாவாரி நிலங்களை அதிகமாக கொண்டுள்ள இந்தப் பகுதியில் நீா் நிலைகளின் குறுக்கே இருந்த தரைப் பாலங்கள் ( ஒரு சில நீங்களாக ) உயா் மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. உப்பு நீா் உள்புகதை தடுக்கவும் உபரி நீரை சேமித்துக் கொள்ள ஏதுவாகவும் அரிச்சந்திரா நதி, அடப்பாறு போன்ற வடிகால் ஆறுகள் சுமாா் ரூ.600 கோடி மதிப்பேட்டில் தூா்வாரப்பட்டு, இயக்கு அணைகளாக அமைக்கப்பட்டது.

ஆற்றங்கரைகளில் குடியிருந்த 400 குடும்பத்தினருக்கு காடந்தேத்தி கிராமத்தில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மீள்குடி அமா்த்தபட்டனா்.

வெள்ளப்பள்ளம்,ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமங்களுக்கு ரூ. 250 கோடியில் படகு துறை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.தற்போது பணிகளை முடிக்க கூடுதல் நிதி இல்லாமல் திமுக ஆட்சியில் முடக்குமடைந்துள்ளது.

கோயில் நகரம் என்பதால் 60 ஆண்டுகளுக்கு மேலாக நின்று போன வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு புதிதாக மரத்தோ் செய்து தேரோட்டம் நடைபெற்றது.

வேதா அமிா்த ஏரி மேம்பாடு, தேரோடும் வீதி காங்கிரட் சாலை இப்படி பலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நீதிமன்ற வழக்கால் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தாமதமாகி வருகிறது.