சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!
அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் ஓ.எஸ். மணியன் கடிதம் அளித்துள்ளது தொடர்பாக....
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ். மணியன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கினர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் சிலர் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புடன் பிரிந்து சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் திரும்பும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் (22 பேர்) தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியில் செயல்பட்டு வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (மே 26) அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதனிடையே வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கோரி, சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
இதனால், சி.வி. சண்முகம் அணி அதிமுக உறுப்பினர்களின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ADMK MLA return to edappadi palanisamy O.S. Manian Writes Letter Seeking Apology
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.