காரைக்கால் பகுதியில் சிற்றேரிகள்: அமைச்சர்ஆய்வு
காரைக்கால் பகுதியில் விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு சிற்றேரிகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர், அபிவிருத்தி ஆணையர் ஆகியோர் பல்வேறு நிலப்பரப்பை ஆய்வு செய்தனர்.
காரைக்கால் பகுதியில் விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு சிற்றேரிகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர், அபிவிருத்தி ஆணையர் ஆகியோர் பல்வேறு நிலப்பரப்பை ஆய்வு செய்தனர்.
காரைக்கால் பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண் துறை செயலரும், அபிவிருத்தி ஆணையருமான அன்பரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது விவசாயிகள், காரைக்கால் பகுதியில் ஏரிகள் வெட்டி தண்ணீர் சேமிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். கூட்ட நிறைவில் காரைக்கால் பகுதியில் சிற்றேரிகள் விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்காக அமைப்பது தொடர்பாக பல்வேறு நிலப்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் அமைச்சர், அலுவலர்கள் புறப்பட்டனர். விழுதியூர் பகுதி அரசலாற்றங்கரையோரத்தில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகமாக மணல் இருக்குமிடத்தை பார்வையிட்டனர். இந்த நிலப்பரப்பிலும், ஆற்றிலும் சிலர், அத்துமீறி மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். இதனை அரசே செய்வதன் மூலம் வருவாய் கிடைப்பதோடு, மணல் அகற்றப்படுமிடத்தை ஏரியாக உருவெடுக்கச் செய்யமுடியும் என அமைச்சர் ஆலோசனை தெரிவித்தார்.
மேலும் மேலஓடுதுறை பங்களாத்தோட்டம் பகுதி அருகே உள்ள கோயில் நிலம் 13 ஏக்கர் பரப்பை ஆய்வு செய்த இக்குழுவினர், இந்தப் பகுதியில் ஏரி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு, திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு புதுச்சேரி முதல்வருடன் கலந்துபேசி இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.