நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் சீர்கேடு: ஆட்சியரிடம் பெற்றோர் புகார்
நெடுங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் மிகவும் சிதிலமடைந்து, ஆபத்துமிக்கதாக உள்ளதென மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறினர்.
நெடுங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் மிகவும் சிதிலமடைந்து, ஆபத்துமிக்கதாக உள்ளதென மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறினர்.
காரைக்கால் பகுதி நெடுங்காடு அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை திங்கள்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் சங்கத்தினர் கூறியது : அரசு தொடக்கப் பள்ளியில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் 103 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியிலிருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு, நாள்தோறும் மதிய உணவு சமைத்து வழங்கும் மத்திய மையமாகவும் செயல்படுகிறது. கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளி வகுப்பறைகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு பருவமழையினால் கூடுதலாக பாதிக்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் வகுப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுதொடர்பாக வகுப்பறை புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்.
பொதுப்பணித்துறை நிர்வாகம், பள்ளியில் 4 வகுப்பறைகள், கழிப்பறைகளைச் சீரமைக்க மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. எனவே, இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, பள்ளி வகுப்பறைகளை விரைவாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டோம் என்றனர்.