முகப்பு
காரைக்கால்

காரைக்கால் நகரப் பகுதியில் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகள்

காரைக்கால் நகரப் பகுதியில் கட்டப்பட்ட இருபாலருக்கான கழிப்பறை வளாகங்கள் திறப்பு செய்யப்பட்டும், மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Updated On : 22 மே, 2018 at 12:54 AM
பகிர்:

காரைக்கால் நகரப் பகுதியில் கட்டப்பட்ட இருபாலருக்கான கழிப்பறை வளாகங்கள் திறப்பு செய்யப்பட்டும், மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தூய்மை இந்தியா திட்ட நிதியில் காரைக்கால் நகராட்சி நிர்வாகம் ஆட்சியரகம் அருகே உள்ள காமராஜர் திடலில் இருபாலருக்கான நவீன கழிப்பறை வளாகம் கட்டியது. மேலும் கடற்கரை மற்றும் நகராட்சி சந்தைத் திடல் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட கழிப்பறைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறைப்படி திறக்கப்பட்டது.
கடற்கரை மற்றும் சந்தைத் திடலில் உள்ள கழிப்பறை வளாகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், காமராஜர் திடலில் உள்ள கழிப்பறை மட்டும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆட்சியர் அலுவலகம், சார்பு ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை, கணக்கு மற்றும் கருவூலத்துறை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஆகியவை உள்ள பகுதியின் 100 மீட்டருக்குள் இந்தக் கழிப்பறை வளாகம் அமைந்திருக்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மேற்கண்ட அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கழிப்பறை வளாகம் பயன்பாட்டுக்கு வராததால் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டு, கழிப்பறை வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் பொதுமக்கள் அங்குமிங்கும் அலைய நேரிடுகிறது. இதுபோல ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட, பழைய காய்கறி மார்க்கெட் வீதியில் கட்டப்பட்ட கழிப்பறையும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவற்றை நிர்வகிக்க உரிய நபர்களை நியமித்து, உடனடியாக கழிப்பறைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.