குப்பைகளை மக்கும், மக்காதது என தரம் பிரித்தே ஒப்படைக்க வேண்டும்: பள்ளி மாணவியருக்கு ஆட்சியர் அறிவுரை
குப்பைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பள்ளி மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் ஆலோசனை வழங்கினார்.
குப்பைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பள்ளி மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் ஆலோசனை வழங்கினார்.
காரைக்கால் முருகாத்தாளாட்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், மாவட் ட ஆட்சியர் ஆர். கேசவனை சனிக்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்தனர். தூய்மை காரைக்கால் திட்டம் குறித்து மாணவியருக்கு ஆட்சியர் ஆலோசனை வழங்கும் வகையில் இந்த சந்திப்பு அமைக்கப்பட்டது.
காரைக்கால் நகர பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் குப்பைகள் சேகரிப்புத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து மாணவர்கள் அறிந்திருக்கிறார்களா என ஆட்சியர் கேட்டறிந்தார். தங்கள் வீடுகளில் எவ்வாறு குப்பைகள் கையாளப்படுகிறது என்பது குறித்து மாணவியர் ஆட்சியரிடம் எடுத்துக்கூறினர்.
ஆட்சியர் பேசும்போது, காரைக்காலில் நகராட்சி நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. நகராட்சியின் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் நேரடியாக நிறுவன தொழிலாளர்கள் சென்று குப்பைகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்தே தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் மாணவ, மாணவியர் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுவட்டாரத்தில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, வீடு எதுவானாலும் குப்பைகள் முறையாக கையாளப்பட வேண்டும். சாலையோரத்தில் வீசியெறிதல் கூடாது. வீட்டிலேயே சேமித்து வைத்து தினமும் வரும் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துமிடத்தில் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை செய்கின்றனர். இவ்வாறான சிரமத்தை நாம் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. வீடுகள், கல்வி நிலையங்கள் தூய்மையாகவும், அதன் சுற்றுப்புறம் கழிவுப் பொருள்கள், கழிவு நீர் தேங்காத வகையில் அமைத்துக்கொள்வதில் மாணவர்கள் அதிக பங்கு கொள்ள வேண்டும்.
காரைக்கால் மாவட்டம் சுகாதாரமானதாக விளங்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார் ஆட்சியர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து மாணவியர், பறவைப்பேட் பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் உரம் இயற்கை உரம் தயாரிப்பு முறையை நேரில் பார்வையிட்டனர். தொழிலாளர்கள் செய்யும் பணிகளை மாணவியர் பார்வையிட்டு, அவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.