முகப்பு
காரைக்கால்

மீலாது நபி விழா: மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

காரைக்காலில் நடைபெற்ற மீலாது நபி விழாவில் கல்வி உதவித் தொகை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழை அமைச்சர்கள் வழங்கினர்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:20 am IST
பகிர்:

காரைக்காலில் நடைபெற்ற மீலாது நபி விழாவில் கல்வி உதவித் தொகை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழை அமைச்சர்கள் வழங்கினர்.
புதுச்சேரி அரசு வக்ஃபு வாரியம் சார்பில் காரைக்கால் பெரியப்பள்ளி வாசல் அருகே மீலாது நபி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வருவாய் மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் தலைமை வகித்தார்.  வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும், சான்றிதழும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்,  அமைச்சர் ஷாஜகான் பேசியது:
2018-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ.9.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 421 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித் தொகையை அரசு அதிகரித்து வழங்கிவருகிறது. சிறுபான்மை இஸ்லாமிய மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிலையங்களால் புதுச்சேரி மாநிலத்துக்கு பெருமை கிடைத்துவருகிறது.
இதனை புதுச்சேரி மாநில  மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றார் அமைச்சர் ஷாஜகான்.
நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மாணவ, மாணவியரை வாழ்த்திப் பேசினார். அரசு சார்பு செயலர் ஜி.சச்சிதானந்தம் வரவேற்றார். 
புதுச்சேரி மாநில ஜமாஅத்துல் உலமா சபை இமாம் எம்.பி.முகம்மது அலி ரஹ்மானி சிறப்புரையாற்றினார். வக்ஃபு நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புதுச்சேரி வக்ஃபு அதிகாரி  ஏ.முகம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.