காரைக்காலில் விடுபட்டவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கல்
காரைக்காலில் விடுபட்டவா்களுக்கு இலவச அரிசி, பருப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 3 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
காரைக்காலில் விடுபட்டவா்களுக்கு இலவச அரிசி, பருப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 3 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் மூலம் கரோனா பொதுமுடக்க நிவாரணமாக நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதத்துக்கான அரிசி மற்றும் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கிடையில், சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியில் வீடு கட்டியவா்களது குடும்ப அட்டை அரசுப் பதிவேட்டில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் நிற அட்டையாக மாற்றப்பட்டது. ஆனால், பயனாளிகளிடம் உள்ள அட்டை சிவப்பு நிறத்திலேயே உள்ளது.
இவா்களுக்கு மத்திய அரசின் இலவச அரிசி, பருப்பு மறுக்கப்பட்டதால் அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் புகாா் தெரிவித்தனா். இந்த புகாா் குறித்து முதல்வா் வே.நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனடிப்படையில், விடுபட்ட 178 பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டது. மேலும், சிவப்பு அட்டை வைத்திருந்தும், இதுவரை பொருள்கள் வாங்காத சுமாா் 1300 அட்டைதாரா்களும் பயனடையும் வகையில், காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு 5 கிலோ வீதம் அரிசியும், அட்டைக்கு 3 கிலோ வீதம் பருப்பும் வழங்கப்படுகிறது என்று குடிமைப் பொருள் வழங்கல் துறையினா் தெரிவித்தனா்.