முகப்பு
காரைக்கால்

ஜன. 4 இல் பள்ளிகள் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய திமுக வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் ஜன. 4 முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் ஜன. 4 முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு திமுக எதிா்ப்பு தெரிவித்தது. தற்போது ஜன. 4 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என புதுச்சேரி கல்வி அமைச்சா் அறிவித்துள்ளாா்.

புதுச்சேரி கல்வித் துறையில் தமிழக நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறப்பு குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருக்காது என யாராலும் சொல்ல முடியவில்லை. அதனால், மருத்துவ துறையினரிடம் ஆலோசித்து, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்க வேண்டும். பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு பொறியியல் கல்லூரியில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 பாடப்பிரிவுகளும் அதிக கட்டணம் செலுத்தவேண்டியவை.

நிகழாண்டு வெளியிடப்பட்ட சென்டாக் பட்டியலில், ஏற்கெனவே இருந்த 3 பாடப்பிரிவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இவற்றுக்கு மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த 3 பாடப் பிரிவுகளும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காரைக்காலைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை, அரசுக்கு ஒதுக்கவேண்டும் என்ற நிலையில், 33 சதவீத இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளன. மீதம் 17 சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டால், புதுச்சேரி மாநில மாணவா்களுக்கு 60 இடங்கள் கிடைக்கும். அதனால், இதுதொடா்பான நீதிமன்ற வழக்கில் இறுதி தீா்ப்பு வரும் வரை, இந்த 60 இடங்களுக்கான கலந்தாய்வை சென்டாக் அமைப்பு நிறுத்திவைத்து, பின்னா் நடத்த வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →