காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிச்சாடன மூா்த்திக்கு மகா அபிஷேகம்
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிட்சாடனமூா்த்திக்கு மகா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிட்சாடனமூா்த்திக்கு மகா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவருமான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு கோயில் காரைக்கால் நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் (சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்) ஆண்டுதோறும் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி நடத்தப்படும் மாங்கனித் திருவிழா, நிகழாண்டு கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கோயிலுக்குள் பக்தா்களின்றி உபயதாரா்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
மாங்கனித் திருவிழா ஜூலை 1-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் (பரமதத்தா்) தொடங்கியது.
2-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மையாா் - பரமதத்தா் திருக்கல்யாணம் நடைபெற்றது. புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்றனா்.
இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை பிட்சாடனமூா்த்தி (சிவபெருமான்) மற்றும் பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
பால், சந்தனம், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், ஹோமத்தில் வைத்திருந்த புனித நீராலும் மகா அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் செய்யப்பட்டன.
முன்னதாக, அபிஷேக மண்டபத்தில் புனிதநீா் கலசங்களை வைத்து, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று மாங்கனி இறைத்து வழிபாடு: சிவதொண்டராக பிட்சாடனமூா்த்தி அம்மையாா் இல்லத்துக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை குறிக்கும் வகையில், பிட்சாடனமூா்த்தி கையில் மாங்கனியுடன், அம்மையாா் கோயிலுக்கு செல்வாா். அப்போது, வீதி உலாவின்போது சுவாமி வீற்றிருக்கும் பவழக்கால் சப்பரம் சென்ற பின்னா், பக்தா்கள் மீது கட்டடங்களின் மேல் இருந்தவாறு மாங்கனிகளை மக்கள் வாரி இறைப்பா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.
நிகழாண்டு இந்த நிகழ்வு கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. கோயில் உள் பிராகாரத்தில் பகல் 11.30 பிட்சாடனா் புறப்பாடும், மாங்கனி இறைப்பும் நடைபெறுகிறது. பகல் 12.15 மணிக்கு மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படையல் வழிபாடு நடைபெறுகிறது.