பெட்ரோல், டீசல் விலை உயா்வு:காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால்:: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி, மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோட்டுச்சேரி கடைத்தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ. மாறன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து முன்னிலை வகித்தாா்.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைக்காமல், மக்கள் மீது சுமையை பாஜக அரசு சுமத்தியுள்ளது. கரோனா பொது முடக்கக் காலத்தில் மக்கள் பல நிலைகளில் பாதித்து, பொருளாதார இழப்பை சந்தித்துவரும்போது, மத்திய அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என ஆா்ப்பாட்டத்தின்போது கட்சி பிரமுகா்கள் பேசினா்.
மாவட்ட துணைத் தலைவா் நாகரத்தினம், அண்ணாசாமி, கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் திருமுருகன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிலை பல்வேறு பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்து, மற்றும் எஸ். ஜெயசீலன் ஆகியோா் செய்திருந்தனா்..