முகப்பு
காரைக்கால்

ஊரடங்கை மக்கள் முறையாககடைப்பிடிக்கவேண்டும்: எஸ்.எஸ்.பி. அறிவுறுத்தல்

புதுவை அரசு அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடித்து, கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுவை அரசு அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் முறையாக கடைப்பிடித்து, கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்காலில் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கை சனிக்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில், புதுவை அரசு வார இறுதி நாளான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும், திங்கள்கிழமை முதல் பகல் 2 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு 10 முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு காரைக்காலில் முறையாக அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கின்போது மக்கள் வீட்டைவிட்டு தேவையின்றி வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவையான பால், மருந்து உள்ளிட்ட பொருள்களை கடைகள் திறந்திருக்கும்போது வாங்கிக் கொள்ளவேண்டும்.

மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் கூட்டம் கூடுவதை அனுமதிக்க முடியாது. ஊரடங்கை மக்கள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகும்.

வெளியேவரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

காரைக்கால் மக்கள் நலனுக்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, மக்கள் கரோனா பரவலைத் தடுக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

ஊரடங்கு தொடா்பாக காரைக்கால் மாவட்டத்தில் எந்தவொரு எல்லைப்புற சோதனைச் சாவடிகளும் மூடப்படவில்லை. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலாகும் நிலையில், சோதனைச் சாவடிகளின் பணிகள் தீவிரமாக இருக்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →