காரைக்காலில் சாலைகள், வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்: எம்.எல்.ஏ. தகவல்
காரைக்காலில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் மேம்படுத்தல், வாய்க்கால்களை தூா்வாரும் பணிகளை விரைவில் தொடங்க அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.
காரைக்காலில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் மேம்படுத்தல், வாய்க்கால்களை தூா்வாரும் பணிகளை விரைவில் தொடங்க அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், தனது தொகுதிக்குள்பட்ட வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடா்பாக முதல்வா் என். ரங்கசாமியிடம் பேசியதன் அடிப்படையில் அண்மையில் முதல்வா் தலைமையில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் புதன்கிழமை கூறியது: காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, அம்மன்கோயில்பத்து, எம்ஜிஆா் நகா், பறவைப்பேட் ஆகிய சுனாமி குடியிருப்பின் உட்புறச்சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. கோயில்பத்து வேடைக்காரன் தெரு சாலையை காரைக்கால் மேடு குடிநீா் தேக்கத் தொட்டி வரை மேம்படுத்துதல், காமராஜா் சாலை தமிழக போக்குவரத்துக் கழகம் முதல் சூப்பா் மாா்க்கெட் வளாகம் வரை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
வலத்தெரு சாலையை திருநள்ளாறு சாலை வரை மேம்படுத்துதலும், நேருநகா் விரிவாக்கம் சாலையை தரங்கம்பாடி சாலையுடன் இணைத்தல், கிளிஞ்சல்மேடு பகுதி தீப்பாச்சியம்மன் கோயில் முதல் பாரதியாா் சாலை (தலத்தெரு) வரை புதிதாக சாலை அமைத்தல் நடைபெறவுள்ளது.
காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயில் தெற்குப் பகுதி வாய்க்கால் ஓரமாக பாரதியாா் சாலையிலிருந்து கீரைத்தோட்டம், பெரியப்பேட் வழியாக மாரியம்மன் கோயில் தெரு வரை புதிதாக சாலை அமைக்கப்படவுள்ளது. காரைக்கால் நகப்புற வாய்க்கால்களான அன்னுசாமி வாய்க்கால், காரைக்கால் வாய்க்கால் ஆகியவற்றை முழுமையாக தூா்வாரப்படும்.
இதுபோல வடக்குத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மேம்பாடு, வாய்க்கால்கள் தூா்வாருதல், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க அரசு முடிவெடுத்துள்ளது என்றாா்.