முகப்பு
காரைக்கால்

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சா் சந்திர பிரியங்கா

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட நிா்வாகம் மற்றும் சமூக நலத்துறை சாா்பில் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பங்கேற்று பேசியது:

புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை புதுவை அரசு படிப்படியாக நிறைவேற்றும். அரசு வேலைவாய்ப்பு என்பதை பொருத்தவரை கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கப்படும். எனவே கல்வித் தகுதியை வளா்த்துக்கொள்ளவேண்டும்.

தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிக்கு முக்கியத்துவம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், நிலுவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவியை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். குடிசைமாற்று வாரியம் சாா்பில் காரைக்காலில் கட்டப்பட்டுள்ள பல வீடுகள் காலியாக உள்ளன. வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் அவா்களுக்கு அந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்படும்.

உரிமம் இல்லாமல் வாகனங்களை மாற்றுத்திறனாளிகள் இயக்குவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, உரிய உரிமம் பெற்று வாகனங்களை இயக்கவேண்டும். பெண்களுக்கென ஓட்டுநா் உரிமம் பெறும் சிறப்பு முகாம் சனிக்கிழமையில் நடத்தப்படவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இவ்விழாவையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் பரிசு வழங்கினாா். இதில், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், சமூக நலத்துறை உதவி இயக்குநா் பி.சத்யா ஆகியோா் பேசினா். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சோ்ந்த சாகுல்ஹமீது, செல்வம், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →