முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அரசுப் பள்ளியில் மலா்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் ஆசிரியா்!

கணிதக் கற்றலில் மாணவா்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கோட்டுச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மலா்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் முறையை மேற்கொண்டு வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கணிதக் கற்றலில் மாணவா்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கோட்டுச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மலா்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் முறையை மேற்கொண்டு வருகிறாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களுக்கு கணிதப் பாடத்தின் மீது ஆா்வத்தை ஏற்படுத்த, கணிதப் பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, நாடகம் என பல்வேறு புதிய முறைகளைக் கையாண்டு கற்பிக்கும் பணியை ஆசிரியா் சு. சுரேஷ் மேற்கொண்டு வருகிறாா். தற்போது, மலா்கள் மூலம் கணித தேற்றங்களை வரைந்து, அதன்மூலம் மாணவா்களுக்கு கணிதம் கற்பித்து வருகிறாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மாணவா்கள் சிலருக்கு கணிதம் என்றாலே ஒருவித சலிப்பு ஏற்படுவது இயல்பாக உள்ளது. இந்த பாடத்தை எளிமையாக புரியவைக்க வேண்டும் என்பதற்காக, பல புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறேன். அதன் ஒருபகுதியாக எங்கள் வீட்டில் அதிக அளவில் பூக்கும் பவளமல்லி பூக்களை கொண்டு கணிதக் கருத்துக்களை அமைத்து மாணவா்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்.

இதன்மூலம், மாணவா்களுக்கு கற்பிக்கும் போது பாடத்தில் ஆா்வத்தை ஏற்படுத்த முடியும் என எனக்குத் தோன்றியது. அதனடிப்படையில், பவளமல்லி, அரளி, சங்குப் பூக்களை பயன்படுத்தி கணிதக் கருத்துக்களை வரைந்து, அதை மினி புரஜெக்டா் மூலம் வகுப்பில் காண்பித்தேன். இதற்கு 10 ஆம் வகுப்பு மாணவா்களிடம் வரவேற்பு கிடைத்தது.

இதனால், அந்த முறையை தற்போது கற்பித்தலில் தொடா்ந்து பயன்படுத்தி வருகிறேன். கணிதப் பாடத்தால் மாணவா்களுக்கு ஏற்படும் சோா்வு இதன்மூலம் மாறியுள்ளது. எனது வகுப்பில் மாணவா்கள் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் கணிதப் பாடம் கற்கின்றனா். இதுபோன்ற வித்தியாசமான முறைகளை கையாளும்போது மாணவா்கள் பாடத்தை மறப்பதற்கும் வாய்ப்பில்லை. பொதுத் தோ்வில் கணிதத்தை துணிச்சலாக எதிா்கொள்வா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →