வீதி நாடகங்கள் மூலம் சமூகத்தைக் கற்பிக்கும் கோவை ஆசிரியை!
கலைத் திருவிழாவில் வீதி நாடகம் மூலம் சமூகப் பிரச்னைகளை கற்பித்து வருகிறார் கோவை ஆசிரியை சசிகலா.
- என். தாமோதரன்
சமூக பிரச்னைகளை வீதி நாடகங்கள் மூலம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறார் பள்ளி ஆசிரியர் சசிகலா.
சமூக வலைதளங்களில் பரவும் பல விடியோக்களைப் பார்த்து பகிர்ந்து வரும் மக்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் சப்தமே இல்லாமல், சமூக பொறுப்புடன் எந்த எதிர்பார்ப்பும் கொள்ளாமல் சேவை செய்து வரும் இதுபோன்றவர்களை கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதுபோன்றவர்களில் ஒருவர்தான் பள்ளி ஆசிரியர் சசிகலா. கல்வி என்பது வெறும் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வது மட்டுமல்ல. மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை வளர்ப்பது, அநீதியை எதிர்த்து கேள்வி கேட்பது, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதும் என்று உணர்ந்திருக்கிறார் இவர்.
கோயம்புத்தூரில் உள்ள கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சசிகலா, வீதி நாடகத்தை, மாணவர்களுக்கு சமூகத்தைப் பற்றி கற்பிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தி அதை மிகச் செம்மையாக செய்து வருகிறார்.
17 ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் 49 வயதான ஆசிரியை டி. சசிகலா, பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் நிகழ்த்தப்படும் வீதி நாடகங்கள் மூலம் மாணவர்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிய உதவி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில், அவரது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, இந்த ஆண்டுடன் சேர்த்து மூன்று முறை முதல் பரிசையும், ஒரு முறை இரண்டாம் பரிசையும் வென்றுள்ளனர்.
பள்ளியில் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தைக் கற்பிக்கும் சசிகலா, படிப்படியாக மாணவர்களுக்கு வீதி நாடகம் பற்றிய பயிற்சி அளிக்க நாடகப் பயிற்றுவிப்பாளராக மாறினார்.
அவரைப் பற்றி அறிந்து, நேரில் சென்ற எக்ஸ்பிரஸ் குழுவிடம் பேசிய அவர், தனது பள்ளி நாள்களிலேயே நாடகத்தின் மீதான ஆர்வம் தொடங்கியதாகக் கூறுகிறார்.
ஈர்ப்பு இருந்தாலும்கூட, பெரம்பலூர் நேரு அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது, ஆண்டு விழா கொண்டாட்டங்களில் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் அதற்கு முந்தைய நாடக ஒத்திகைகள், இசை நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்த சசிகலா, நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பள்ளி நாள்களில்தான், ‘மனிதகுலத்திற்கு சேவை’ செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் என்னை ஒரு ஆசிரியராகத் தூண்டியது என்கிறார். பின்னர் அவர் கரூரில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார், அங்குதான் அவருக்கான நாடக வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியின் நிறைவு விழாவில் மேடையில் இலக்கிய நாடகம் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியைத் தொடங்கிய சசிகலா, பள்ளியில் குடியரசு நாள், சுதந்திர நாள், ஆண்டு விழாக்களின்போது, கவிதை, பாடல் பாட, நடனம் ஆட மாணவர்களைத் தயார்படுத்துவதன் மூலம் தன்னுடைய கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். கல்வீரம்பாளையம் பள்ளியில், ஜூனியர் செஞ்சிலுவைச் சங்க (ஜே.ஆர்.சி) ஆலோசகராக பணியாற்றிய சசிகலா, மாணவர்களை அணிவகுப்பு பயிற்சியைக்குத் தயார் செய்வது, வெளியில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்து அழைத்துச் செல்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.
2022-ஆம் ஆண்டுதான், சசிகலாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, மாணவர்கள் தங்களது கலைத் திறமையை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்த கலைத் திருவிழா. இதனால், பள்ளிகளில் கலைப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். கல்வீரம்பாளையம் பள்ளிக்கு கலைஞர் சந்திரமதி என்பவர் நியமிக்கப்பட, அவருக்கு ஒருங்கிணைப்பாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.
இருவரும் இணைந்து மாணவர்களுக்கு வீதி நாடகத்துக்கு பயிற்சி அளித்தனர். முன் அனுபவம் எதுவும் இல்லாத நிலையிலும், சசிகலா, இலக்கிய நாடக அறிவை வளர்த்துக்கொண்டு சொந்தமாகவே நாடகக் கதைகளை எழுதத் தொடங்கினார்.
முதல் ஆண்டில், அப்போதைய சமூகப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு, சாதி பாகுபாடு, பெண்கள் மீதான துன்புறுத்தல், உயிர்ப் பலி மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னை என நான்கு கருத்துகளுடன், 30 நிமிட நிகழ்ச்சிக்காக எது அநீதி? என்ற தலைப்பில் ஒரு வீதி நாடகத்தை எழுதினேன் என்கிறார் அவர்.
கதை, வசனங்கள், பாடல்கள் என ஒவ்வொரு கருத்துக்கும் எழுதினார். சாதி பாகுபாடு பற்றிய கருத்தை வலியுறுத்தி அவர் எழுதிய பாடல், ஆதியில் சாதி இல்லை, ஆண்டவனும் வகுக்கவில்லை, பாதியில் வந்ததடா சாதி, அது, பாடையிலும் பேசுதடா நீதி.. என எழுதியிருந்தார்.
கதை தயாரானதும், சந்திரமதி, மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். சசிகலாவும் இதனைக் கற்றுக் கொண்டார். மாணவர்கள் உற்சாகத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இதனால், அப்பகுதி மற்றும் மாவட்ட அளவில் இவர்களது நாடகக் குழு, மாநில கலைத் திருவிழாவில் நிகழ்ச்சிகளை நடத்தி, வீதி நாடகப் பிரிவில் முதலிடம் பெற்றனர்.
அடுத்து, பயிற்சிக் கலைஞர்கள் நியமிக்கப்படாததால், சசிகலா, சந்திரமதியிடம் வழிகாட்டுதலைப் பெற்று மாணவர்களுக்கு தானே பயிற்சி அளித்தார்.
முதல் ஆண்டே முதலிடம், இரண்டாம் ஆண்டு விட்டுவிடுவார்களா என்ன? பெண் கல்வி, குழந்தைத் திருமணம், பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, உணவு கலப்படம் போன்ற பிரச்னைகளை நாடகத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மீண்டும் முதலிடம். அடுத்த ஆண்டு இரண்டாம் இடம், இந்த ஆண்டு முதல் இடம் என வீதி நாடகத்தில் முன்னணியில், பலரது ஆச்சரியங்களுக்கும் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறது இந்த வீதி நாடகக் குழு.
சசிகலாவின் நாடகங்கள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அது உணர்வுப்பூர்வமாக படைக்கப்படுவதாகக் கூறுகிறார்.
பள்ளியின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெற்ற சசிகலா, வீதி நாடகப் பயிற்சி பெற்றால், படிப்பில் பின் தங்குவார்கள் என்ற மூட நம்பிக்கையை உடைத்தெறிந்தார். நாடகக் குழுவில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். நாடகக் கலை மூலம் அவர்கள் சமூகத்தைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நாம், முதலில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
வீதி நாடகத்தைத் தொடர்ந்து மைம் கலைப் பயிற்சியையும் மாணவர்கள் பெறுவதற்கு சசிகலா உதவியுள்ளார். அதன் மூலம், கலைத் திருவிழாவில், நெசவாளர் வாழ்க்கை குறித்து மாணவர் என். பகவத் சிங் நடத்திய மைம் நிகழ்வு, பலத்த கரகோஷத்துடன் முதல் பரிசு மற்றும் கலையரசன் என்ற விருதையும் பெற்றுத்தந்தது.
சமூகத்தைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், சமூகத்தில் இத்தனைப் பிரச்னைகள் இருக்கிறது என்றே தெரியாமல் இருந்ததாகவும், வீதி நாடகம் மூலம் பல விஷயங்களை அறிந்துகொண்டதாகவும், அவரது குழுவில் உள்ள மாணவர்கள் ஒருமித்தக் குரலில் சொல்கிறார்கள்.
Coimbatore teacher Sasikala is teaching social issues through street drama at the arts festival.