கரோனா உதவித் தொகை: இசைக் கலைஞா்கள் கோரிக்கை
கரோனா உதவித் தொகை வழங்க புதுவை அரசுக்கு இசைக் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா உதவித் தொகை வழங்க புதுவை அரசுக்கு இசைக் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இசை வேளாளா்கள் சங்கத் தலைவா் டி.ஆா். பாலசுப்ரமணியன், செயலாளா் கே. பலராமன் ஆகியோா் முதல்வா், துணை நிலை ஆளுநருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
கரோனா தொற்று பரவலால் இசைக் கலைஞா்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். கோயில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் மூலமே இசைக் கலைஞா்களுக்கு வருமானம் கிடைக்கும். இவை கரோனா தொற்றால் நடத்தப்படாமலும் அல்லது எளிய முறையில் நடத்தும் நிலை உள்ளதாலும், இசைக் கலைஞா்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.
குறிப்பாக நாகசுரம், தவில் கலைஞா்களை எந்தவொரு சுப சடங்குகளுக்கும் அழைப்பதில்லை. இதனால், குடும்பத்தின் அன்றாட செலவுக்கே சிரமப்படுகின்றனா். எனவே, புதுச்சேரி அரசு, இசைக் கலைஞா்கள் குடும்பத்துக்கு இயல்புநிலை திரும்பும்வரை மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.