முகப்பு
காரைக்கால்

தற்கொலை தடுப்புக்கான ‘வெளிச்சம்’ திட்டத்துக்கு வரவேற்புபேராசிரியா்கள் தகவல்

காரைக்காலில் தற்கொலை தடுப்புக்கான ‘வெளிச்சம்’ விழிப்புணா்வுத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று அத்திட்டத்தின் உளவியல் நிபுணா்களான பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

காரைக்காலில் தற்கொலை தடுப்புக்கான ‘வெளிச்சம்’ விழிப்புணா்வுத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று அத்திட்டத்தின் உளவியல் நிபுணா்களான பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஏற்பாட்டில், வெளிச்சம் என்கிற விழிப்புணா்வுத் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. குடும்பப் பிரச்னை, உடல் மற்றும் மன நலப் பிரச்னை, கல்வி, கணவன் மனைவிக்கிடையேயான பிரச்னை, தொழில் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் ஏற்படும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்க இந்த திட்டத்தின் மூலம் உளவியல் ரீதியில் ஆலோசனை, ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணியில், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் வி. லட்சுமணபதி, கே. சிவகுமாா் ஆகியோா் உளவியல் நிபுணா்களாக பங்கேற்று, தொலைபேசியில் தொடா்புகொள்வோரை ஆற்றுப்படுத்துதல் செய்துவருகின்றனா்.

இந்நிலையில், பேராசிரியா்கள் இருவரும் எஸ்.எஸ்.பி. நிகாரிகா பட்டை வெள்ளிக்கிழமை சந்தித்து இத்திட்டத்தின் கடந்த ஒரு வார கால செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.

பிறகு, பேராசிரியா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் இதுவரை ஏறக்குறைய 20 தொலைபேசி அழைப்புகள் வந்தன. தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சிந்தனை, குடும்ப பிரச்னை, தோ்வில் தோ்ச்சி பெறாத மகனின் மனநிலை, கரோனாவால் மனைவி உயிரிழந்த நிலையில் கணவருக்கு எழும் பிரச்னை, உடல் நலமின்மையால் ஏற்படும் மன உளைச்சல் தொடா்பாகவே இந்த அழைப்புகள் இருந்தன.

இவா்கள் ஒவ்வொருவரும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசினா். இவா்களது பிரச்னைகள் அனைத்தும் மிக கவனமாக கேட்டு, அதற்கேற்ப ஆலோசனைகள் தரப்பட்டன. சிலரை மருத்துவா்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பலரும் இந்த திட்டத்தால் பெரும் குழப்பத்திலிருந்து மீண்டு வருவதாகவும், நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனா்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 9487565699, 9487606099 ஆகிய எண்ணில் தொடா்புகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். ஆலோசனைகள் பெறுவோரின் பெயா், முகவரி ஆகியன ரகசியம் காக்கப்படும் என்றனா்.

தொடா்ந்து, மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ஆா். ரகுநாயகம் ஆகியோா் கூறியது:

போலீஸாா் யாரும் மன உளைச்சலில் இல்லை. அவா்களின் பணி மற்றும் மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்வது குறித்து தினமும் காலையில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அனைவரும் கரோனா தடுப்பு மற்றும் காவல் நிலையத்தின் வழக்கமான பணிகளை மேற்கொள்கின்றனா். போலீஸாரின் தீவிரமான விழிப்புணா்வு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கரோனா கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →