கோடையைக் கலக்கப் போகும் ஒரு டஜன் திரைப்படங்கள்! ஜனநாயகன் எப்போ.?
கோடையைக் கலக்கப் போகும் ஒரு டஜன் திரைப்படங்களைப் பற்றி...
கோடைக்காலத்தையும், தேர்தல் விடுமுறையையும் ஒட்டி 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராகியுள்ள நிலையில், விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகம், கேரளம் உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவும், அதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் முடித்து வைக்கும் பணியிலும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் திரைக்கு வர தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
சூர்யாவின் கருப்பு, தனுஷின் கர உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில், நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் ஜன நாயகன் படமும் வெளியாகுமா? ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கும் திரையரங்குகளுக்கும் சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், மொத்தமாக வெளியான 75 படங்களில் ஆச்சரியமளிக்கும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாராசக்தி, தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய்க் கிழவி போன்ற படங்கள் நல்ல வசூலீட்டின.
இந்த நிலையில், இந்தத் தேர்தல் காலகட்டத்தில் ஏப். 30 முதல் மே கடைசி வரையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வரத் தயாராகியுள்ளன.
ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மே மாதத்திற்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வார இறுதி முதல் ஜூலை மாதம் வரை பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதனால், சிறிய பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரிக்கும் பலரும், அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கள் படங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மார்ச் 19 ஆம் தேதி கென் கருணாஸின் இயக்கத்தில் யூத் திரைப்படம் வெளியாகிறது. அடுத்த சில வாரங்கள் இது போன்ற சிறிய படங்கள் வெளியாகலாம். ஏப்ரல் முதல் வாரத்தில் அரை டஜன் படங்களும், தேர்தலுக்கு முன்னதாக தமிழ் வருடப்பிறப்பு விடுமுறையையொட்டி சில படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் காலகட்டத்தில் பெரிய படங்களின் வெளியீட்டை பெரிதும் பாதிக்கின்றன. மக்களின் பார்வை தேர்தல் பக்கம் திரும்பியிருப்பதால், போதிய அளவில் விளம்பரம் செய்தாலும், அதிக வசூலீட்டாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருவாரா ஜன நாயகன்!
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைக்குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக வெளியீட்டில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
பொங்கலுக்கு வெளியாகவிருந்த படம் கோடைக்காவது வெளியாகுமா? என கோலிவுட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மே முதல் வாரம் வரை இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பதால், ஜூனில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் கடைசியில் இருந்து மே முதல் வாரத்தில் ஜன நாயகன் வெளியீடு இருந்தாலோ அல்லது தள்ளிப்போனாலோ, பொங்கல் வெளியீடு போல சிறிய படங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.