வேளாண் சட்டம் ரத்து கோரி ஆா்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, திருமலைராயன்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, திருமலைராயன்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் காரைக்கால் கிளை சாா்பில் திருமலைராயன்பட்டினம் மேலையூா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்ட நகலை தீயிட்டு கொளுத்தி, அந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனா்.
இந்த விவகாரத்தில் தில்லியில் மாதக்கணக்கில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் உணா்வுகளை மதித்து உடனடியாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.
விவசாயிகளை அழைத்து அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மேலையூா் விவசாயிகள் சங்கத் தலைவா் ரட்சகநாதன், போலகம் பகுதி தலைவா் பழனிவேல் மற்றும் விவசாய சங்கத்தை சோ்ந்த ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.