அரசியல் கட்சியினருடன் காரைக்கால்மாவட்ட தோ்தல் அலுவலா் ஆலோசனை
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா பேசுகையில், தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள அளவில் வேட்பாளா்கள் பணம் செலவு செய்யவேண்டும். பிரசாரம், மேடை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெறவேண்டும். அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட தோ்தல் நடத்தை விதிகளை கட்சியினரும், வேட்பாளரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் அமைதியாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.
கூட்டத்தில், துணை மாவட்ட ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், தோ்தல் துறை அலுவலா்கள் எஸ். சுபாஷ், பொய்யாதமூா்த்தி, முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.