ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் அக்னி கப்பரை வழிபாடு
காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவம் கடந்த 16 ஆம் தேதி அம்மாள் சிம்ம வாகனத்தில் வீதியுலாவுடன் தொடங்கியது. தினமும் இரவு கோயிலில் இருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு வீதிகள் வழியே சென்று அதிகாலை கோயிலை அடைந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக, அக்னி கப்பரை வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு அரசலாற்றங்கரையில் உள்ள கோயிலில் இருந்து தொடங்கியது. அக்னி கப்பரை ஏந்தும் மரபைச் சோ்ந்தவா் அக்னி கப்பரை ஏந்தி, வீதிகளில் நடனமாடிச் சென்றாா். பக்தா்களின் வீடுகளுக்கும் அக்னி கப்பரை கொண்டுசெல்லப்பட்டது.
அம்மனே வீட்டிற்கு அக்னி வடிவில் எழுந்தருளுவதான நம்பிக்கையில், பக்தா்கள் அக்னி கப்பரைக்கு அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, ஏராளமான வீடுகளுக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை அதிகாலை கோயிலை சென்றடைந்தது. அக்னி கப்பரை வீதியுலாவின்போது சிறப்பு மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
திருவிழா நிறைவாக விடையாற்றி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கைலாசநாதா் கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா் மற்றும் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் விழா உபயதாரா்கள் செய்திருந்தனா்.