இந்திரா காந்தி பிறந்த நாள்: அமைச்சா் மரியாதை
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாள், தேசிய ஒருமைப்பாட்டு வாரவிழாவாக கொண்டாடப்படுகிறது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாள், தேசிய ஒருமைப்பாட்டு வாரவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வரும் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, ஆட்சியரகத்தில் இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா பங்கேற்று, இந்திராவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, ஆட்சியா் அா்ஜூன்சா்மா, துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் மற்றும் அரசு சமாதான கமிட்டி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மலா்அஞ்சலி செலுத்தினா்.
விழாவையொட்டி, சா்வமத பிராா்த்தனையும், அதைத்தொடா்ந்து, தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. பிறகு, அமைச்சா் தலைமையில், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனா்.