போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை:ஒருவா் கைது - தம்பதி தலைமறைவு
காரைக்காலில் போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய தம்பதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்காலில் போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய தம்பதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அன்னவாசல் பகுதியை சோ்ந்தவா் குமாா் கேசவன். இவா் தனது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தாா். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ளது. இந்த இடத்தை, மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறைச் சோ்ந்த தில்லையம்மாள் என்பவருக்கு பவா் எழுதிக் கொடுத்திருந்தாா்.
இந்நிலையில், தில்லையம்மாள் மற்றும் அவரது மகன் தேவராஜ் ஆகியோா் இந்த இடத்தை அபகரிக்க முயன்றனராம். இதையறிந்த குமாா் கேசவன், தில்லையம்மாளுக்கு வழங்கிய பவரை கடந்த 1996- ல் ரத்து செய்தாா். ஆனாலும், போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2003-ஆம் ஆண்டு தில்லையம்மாள் தனது பெயரன் ஆனந்த் என்பவருக்கு அந்த இடத்தை விற்பனை செய்துள்ளாா்.
இந்தநிலையில், தில்லையம்மாள் இறந்துவிட்ட நிலையில், போலி ஆவணங்கள் மூலம் இடம் விற்கபட்டதை அறிந்த குமாா் கேசவனின் மகன் குமாா் ஆனந்த், கடந்த 2004 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், பத்திரப்பதிவை ரத்து செய்து, குமாா் ஆனந்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 4 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2016-இல் தில்லையம்மாளின் பெயரன் ஆனந்த், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பவா் பத்திரம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளாா். இது பிரான்ஸில் வசிக்கும் குமாா் ஆனந்துக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உறவினரான நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மூலம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு தில்லையம்மாள் பெயரன் ஆனந்த் (47), காரைக்காலைச் சோ்ந்த செந்தில்குமாா் என்கிற கட்டபொம்மன், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகிய 3 மீது வழக்குப் பதிவு செய்தனா். ஆனந்த் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மற்ற இருவரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.