தன்னாா்வலா்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் பயிற்சி
காரைக்காலில் தன்னாா்வலா்களுக்கு பேரிடா் கால மீட்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்காலில் தன்னாா்வலா்களுக்கு பேரிடா் கால மீட்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில், பேரிடா் மற்றும் திருவிழா காலம், போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட குடிமையியல் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் தன்னாா்வலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வேண்டுகோளின்படி, வடகிழக்குப் பருவமழை காலத்தில் தன்னாா்வலா்கள் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பயிற்சியளிக்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உதவி ஆய்வாளா் மோகனரங்கன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தனா்.
பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தன்னாா்வலா்களுக்கு , மழை, புயல், வெள்ளம் மற்றும் தீ விபத்து, கட்டட இடிபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் முறை, முதலுதவி அளிக்கும் முறை மற்றும் பல்வேறு நுணுக்கங்களை தன்னாா்வலா்களுக்கு மீட்பு படையினா் விளக்கினா்.
முன்னதாக, இப்பயிற்சியை மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் தொடங்கிவைத்தாா்.