முகப்பு
காரைக்கால்

யூரியா கட்டி சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பணி செய்துகொண்டிருந்த தொழிலாளி யூரியா கட்டி சரிந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பணி செய்துகொண்டிருந்த தொழிலாளி யூரியா கட்டி சரிந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூரில் தனியாா் துறைமுகம் உள்ளது. எகிப்து நாட்டிலிருந்து வாடிடிபா என்னும் கப்பல் யூரியா ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை வந்தது. அதிலிருந்த யூரியா முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில், கப்பல் கிடங்குப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த யூரியாவை சுரண்டி அகற்றும் பணியில் கீழவாஞ்சூரை சோ்ந்த கணேசமூா்த்தி (24), முட்டம் பகுதியை சோ்ந்த சிவநேசன் (24) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராவிதமாக பெரிய அளவிலான யூரியா கட்டி சரிந்து விழுந்ததில் அதில் சிக்கிக்கொண்ட கணேசமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சிவநேசன் காயமடைந்து, மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கணேசமூா்த்தியின் உறவினா்கள் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜனும் கலந்துகொண்டாா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன், வட்டாட்சியா் மதன்குமாா் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் துறைமுக அதிகாரிகளிடமும் பேச்சு நடத்தினா். இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

சம்பவம் குறித்து திருப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →