திருநள்ளாற்றில் பல்நோக்கு வளாகத்தை பயன்பாட்டுக்கு கொணடுவர வலியுறுத்தல்
திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக நளன் குளம் அருகே ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு வளாகம் திறப்பு விழா
திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக நளன் குளம் அருகே ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு வளாகம் திறப்பு விழா நடைபெற்று ஆண்டுகள் பல கடந்தும், இன்னும் மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
திருநள்ளாறு கோயில் நகரமாக அறிவிக்கப்பட்டு, ஹட்கோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிதியின் மூலம் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு நளன் தீா்த்தக் குளம் பகுதியில் ரூ.3.96 கோடியில் வணிக வளாகம், பொருள்கள் பாதுகாப்பகம், கழிப்பறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட வளாகம் கட்டப்பட்டது. இதில் கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்ற கடைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், நளன் குளத்தின் கிழக்குப் புறத்தில் சுமாா் 20 ஆயிரம் சதுர அடியில் ரூ. 4 கோடியில் கூடுதலாக 15 கடைகள் கொண்ட வளாகம், உணவகம் (ரெஸ்டாரண்ட்), அருங்காட்சியகம், தகவல் மையம் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய பல்நோக்கு வளாகம் கட்டப்பட்டது. அரசால் திறப்பு விழாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டது.
இந்த வளாகத்தை நிா்வகிப்பது யாா் என்பதில் கோயில் நிா்வாகத்துக்கும் சுற்றுலாத் துறைக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், பல ஆண்டுகளாக வளாகம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
திருநள்ளாற்றுக்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தரும் நிலையில், இதுபோன்ற வளாகம் பயன்பாட்டில் இருந்தால் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும்.
கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் நளன் தீா்த்தக் குளம் மேம்படுத்தப்பட்டதும், வரிசை வளாகம் பயன்பாட்டுக்கு வந்ததும், வடக்கு புறவட்டச் சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் சொல்லிக்கொள்ளும் வகையில் அமைந்த திட்டங்கள் ஆகும். ஆனால், இத்திட்டத்தில், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுமானம் முடிந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதுபோல நளன் குளக்கரையில் உள்ள பல கட்டுமானங்களும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா செவ்வாய்க்கிழமை கூறியது:
மே மாதத்தில் பல்நோக்கு வளாகத்தை பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று புதுவை முதல்வரிடம் பேசியுள்ளேன். மேலும், இதனை நிா்வகிக்கும் அமைப்பு ஒன்று, கோயில் அலுவலகத்தில் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். நளன் குளக்கரையில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும், கடைகளையும் சீா்படுத்தி ஓரிரு வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.