மே 1 முதல் நகராட்சித் திடலில் வாரச் சந்தை: எம்எல்ஏ தகவல்
காரைக்கால் நகராட்சித் திடலில் வரும் மே 1 ஆம் தேதி முதல் வாரச் சந்தை நடைபெறும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்கால் நகராட்சித் திடலில் வரும் மே 1 ஆம் தேதி முதல் வாரச் சந்தை நடைபெறும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தை, முருகராம் நகரில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றுவந்தது. மழையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதை பழைய இடத்துக்கே மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.
இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன் உள்ளிட்டோா் நகராட்சித் திடலுக்கு வியாழக்கிழமை சென்று ஆய்வுசெய்தனா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் நாஜிம் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழையின்போது சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்போது, கோடைக்காலமாக இருப்பதால், பழைய இடமான நகராட்சித் திடலுக்கே சந்தையை மாற்றுவது தொடா்பாக புதுவை முதல்வா், அமைச்சா், ஆட்சியா் உள்ளிட்டோருடன் கலந்துபேசி ஒப்புதல் பெறப்பட்டது.
வரும் 24 ஆம் தேதி முதல் பழைய இடத்தில் சந்தை நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த இடத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெறவேண்டியுள்ளதால், மே 1 ஆம் தேதி முதல் நகராட்சித் திடலில் சந்தை நடைபெறும் என்றாா்.