புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காரைக்கால் மாவட்டத்தில் அதிமுக புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த நிலையில், காரைக்கால் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கபப்பட்டுள்ளன.
காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காரைக்கால் மாவட்டத்தில் அதிமுக புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த நிலையில், காரைக்கால் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கபப்பட்டுள்ளன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு அதிகாரத்துடன் செயல்படவேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்கள் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வருவதற்கும், நிதி வருவாய் பெருகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி புதுவையில் கடையடைப்புப் போராட்டத்திற்கு அதிமுக அழைப்புவிடுத்தது.
காரைக்கால் மாவட்டத்தில், சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் மற்றும் அனைத்து வணிகர்களையும் அதிமுகவினர் கடந்த 2 நாள்களாக சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.
போராட்ட நாளான புதன்கிழமை காரைக்கால் நகரில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ஆங்காங்கே திறக்கப்பட்ட சில கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரினர்.
தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுவருகின்றன. திரையரங்குகளில் முற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
பிற செயல்பாடுகள் மாவட்டத்தில் வழக்கம்போல் இயங்கின.
காரைக்கால் போலீஸார் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.