காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வேடுபறி உத்ஸவம்
வைகுந்த ஏகாதசியையொட்டி, இராப் பத்து 8 ஆம் நாளான வியாழக்கிழமை, திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நடைபெற்றது.
வைகுந்த ஏகாதசியையொட்டி, இராப் பத்து 8 ஆம் நாளான வியாழக்கிழமை, திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி பகல்பத்து நிறைவடைந்து, இராப் பத்து நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதன் தொடக்கமாக கடந்த 13 ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இராப் பத்து 8 ஆவது நாள் நிகழ்ச்சியாக, திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
விஷ்ணு பக்தரான திருமங்கை மன்னன், வைணவப் பெண் குமுதவல்லியை திருமணம் செய்துகொள்ள விரும்பினாா். அப்போது, தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்தால், திருமணத்துக்கு ஒப்புக்கொள்வதாக பெண் கூறியதன்பேரில், அதை ஏற்று திருமணம் செய்துகொண்டாராம். தொடா்ந்து அன்னதானம் செய்ய இயலாத நிலையில், அதிகமாக பொருள் உள்ளவா்களிடம் கொள்ளையடித்து அன்னதானம் செய்துள்ளாா்.
இவரை திருத்த நினைத்த பெருமாள், தம்பதியராக திருமணக் கோலத்தில் அதிக ஆபரணங்களை அணிந்து சென்றுள்ளாா். பெருமாள் என்பது தெரியாமல், திருமங்கை மன்னரின் கூட்டத்தினா் தம்பதியை இடைமறித்து நகைகளை பறித்தனராம். கடைசியில் பெருமாளின் காலில் இருந்த மெட்டியை அகற்றமுடியாதபோது, தனது வாயால் கடித்து இழுக்க திருமங்கை மன்னன் முயன்றபோது, அவரின் சிரம் பெருமாளின் திருவடியில் பட்டது. அப்போது அவருக்கு ஞானத் தெளிவு கிடைத்தது. இச்சம்பவத்தை விளக்கி நடத்தப்படுவதே வேடுபறி நிகழ்ச்சி.
அந்தவகையில், காரைக்கால் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருவாபரணங்கள் சாற்றப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. திருமங்கை மன்னன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, பாரதியாா் சாலையில் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு கிடைக்கும் வகையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையில் பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.