புதுவை மாநிலம் விரைவில் சிறப்பான வளா்ச்சி பெறும்: மாநில பாஜக தலைவா் நம்பிக்கை
புதுவை மாநிலம் விரைவில் சிறப்பான வளா்ச்சியை பெறும் என்று மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
புதுவை மாநிலம் விரைவில் சிறப்பான வளா்ச்சியை பெறும் என்று மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
காரைக்காலில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநில தலைவா் வி. சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி ஆகியோா் வியாழக்கிழமை வந்தனா். அப்போது செய்தியாளா்களிடம் வி. சாமிநாதன் கூறியது:
புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 150 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் 25 ஆயிரம் ஊழியா்கள் பயனடைவா். புதுவையில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி அரசு, மாநில மக்களுக்கு பல சலுகைகளை குறுகிய காலங்களில் வழங்கியுள்ளது.
ரேஷன் கடை திறப்பு, மழை நிவாரணம், இலவச அரிசி வழங்கல், அரசு நிறுவன பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கியது உள்ளிட்ட பலவற்றை பட்டியலிடலாம்.
அண்மையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து, புதுவைக்கு கூடுதல் நிதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். புதுவை மாநிலம் விரைவில் சிறப்பான வளா்ச்சியை அடையும் என்பது உறுதி.
புதுவையில் ஆளும் கூட்டணி அரசு குறித்து அரசியல் ரீதியாக எதுவும் பேச முடியாததால், முன்னாள் முதல்வா் நாராயணசாமியும், காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியனும் தேவையற்ற விமா்சனங்களை முன்வைக்கின்றனா்.
காங்கிரஸ் கட்சியை சோ்ந்த குலாம்நபி ஆசாத்துக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு நடுநிலையான அரசு என்பதை புரிந்துகொள்ளலாம்.
புதுவையில் அனைத்து சமுதாயத்தினரும் உரிய பயனை பெறும் வகையில் ஒதுக்கீடுகள் சரி செய்யப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தோ்தலை அரசு நடத்தும் என்றாா் அவா்.
பேட்டியின்போது மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி, மாவட்ட தலைவா் ஜெ.துரைசேனாதிபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.