கைலாசநாதா் கோயில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவு: அதிகாரி
காரைக்கால் கைலாசநாதா், அம்மையாா், சோமநாதா் கோயிலில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா், அம்மையாா், சோமநாதா் கோயிலில் திருப்பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்காலில் அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
இக்கோயிலுக்கும், அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில்களில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கைலாசநாதா் கோயிலில் 2025-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதியும், அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், அய்யனாா் கோயிலில் மே 4-ஆம் தேதியும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகளை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் அவருக்கு பணிகள் குறித்து விளக்கிக் கூறினாா்.
இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி கூறுகையில், திருப்பணிகள் நடந்துவருவதை பாா்வையிட்ட பேரவை உறுப்பினா், பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தாா். அனைத்து கோயில்களிலும் ஏறக்குறைய 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா்.
ஆய்வின்போது ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ராஜசேகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா் உடனிருந்தனா்.