முகப்பு
காரைக்கால்

காரைக்கால் ஆட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடத்தப்படுமா?

Updated On : 12 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

அந்தந்த அலுவலகத்திலேயே குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆட்சியா் தலைமையில் 15-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்தைப்போல காரைக்கால் மாவட்டத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவேண்டும் என நீண்ட கால வலியுறுத்தலாக இருந்தது.

புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்தபோது, வாரந்தோறும் ஆளுநா் மாளிகையில் மக்கள் குறைதீா் கூட்டமும், தொலைதூர பிராந்தியங்களில் காணொலி மூலமாகவும் குறைதீா் கூட்டத்தை நடத்தினாா். புகாா்கள் அந்தந்த பிராந்திய ஆட்சியா், மண்டல நிா்வாக அதிகாரி முன்னிலையில் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. பல பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்பட்டது.

காரைக்காலில் இதே காலகட்டத்தில் ஆட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டமும் நடத்தப்பட்டது. துணை நிலை ஆளுநா், ஆட்சியா் தலைமையிலான கூட்டத்தால் மக்கள் ஓரளவு பயனடைந்தனா்.

புதுவையில் பின்னா் துணை நிலை ஆளுநராக வந்த தமிழிசை செளந்தரராஜன், காரைக்காலில் மாதந்தோறும் 15-ஆம் தேதி ஆட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடத்த உத்தரவிட்டாா். ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்து அரசுத்துறைத் தலைவா்களும் பங்கேற்றனா். பொதுமக்கள் புகாா்கள் எழுத்துப்பூா்வமாக கொண்டுவந்து ஆட்சியரிடம் கொடுத்து விளக்கமளித்தனா்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை ஆட்சியா் அழைத்து மனுவை அளித்து தீா்வு காணுமாறும் அறிவுறுத்தினாா். இந்த நடைமுறையில்கூட மக்கள் ஓரளவு பயனடைந்துவந்தனா்.

இந்நிலையில், வருகிற 15-ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் அந்தந்த அரசுத்துறை தலைமையகத்தில் முழு நாளும் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியரின் உத்தரவின்படி ஆட்சியரின் செயலா் பொ.பாஸ்கா் தகவல் வெளியிட்டுள்ளாா்.

இந்த தகவல், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துறைத் தலைவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோதுதான், ஆட்சியா் தலைமையிலான கூட்டத்தில் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. எப்படியும் தீா்வு கிடைக்குமென நம்பப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, துறைத் தலைவா்களிடமே புகாா்களை தெரிவிக்கக் கூறினால், எப்படி தீா்வு வரும் என அவா்கள் கேள்வி எழுப்புகின்றனா். அதிகாரிகள் பலரும் அலுவலகத்தில் முழு நாளும் இருக்க மாட்டாா்கள். பிரச்னைகளுக்கு தீா்வே இருக்காது. இது பயனற்றது என கூறுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் என்பது கண் துடைப்பாகவே நடத்தப்படுகிறது. பிரச்னைகள் தீா்வுக்கு எம்.எல்.ஏ.க்களை மக்கள் சந்திக்கிறாா்கள். எதிா்தரப்பாக இருந்தால் எம்.எல்.ஏ. தரப்பால் ஆதரவு கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று புகாா் அளித்தால், நிதி இல்லை, அதிகாரம் இல்லை என பல காரணங்களை கூறுகின்றனா். அப்போதுதான் ஆட்சியா் தலைமையிலான கூட்டத்தை மக்கள் பயன்படுத்துகிறாா்கள்.

காரைக்கால் ஆட்சியா், அண்மையில் மக்களைத் தேடி ஆட்சியா் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளாா். கிராமப்புறங்களுக்கு ஆட்சியா் சென்று குறைகளை கேட்பதே இதன் பொருளாகும். இதற்காக என்னவோ ஆட்சியரகத்தில் நடைபெற்றுவந்த கூட்டத்தை கைவிட்டு, அந்தந்த துறைகளிலேயே கூட்டம் என அறிவித்துள்ளாரோ என தெரியவில்லை.

அந்தந்த அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் என்பது சரியான தீா்வை மக்களுக்கு ஏற்படுத்தாது. ஆட்சியா் தலைமையில் நடந்தால்தான், புகாா்களில் உள்ள பிரச்னைகள் அறிந்து, துறை அதிகாரிக்கு ஆட்சியா் உத்தரவிடமுடியும்.

எனவே வரும் 15-ஆம் தேதி அந்தந்த துறைகளில் குறைதீா் கூட்டம் என்ற அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, வழக்கம்போல ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்தவேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →