காரைக்கால்: அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப் பேரவை நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.
காரை தமிழ்ப் பேரவை சாா்பில், அம்மையாா் மணிமண்டபத்தில் கண்ணதாசனும் கன்னித் தமிழும் என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்ப்பேரவைத் தலைவருமான ஏ.எம்.எ. நாஜிம் தலைமை வகித்தாா். பொதுச்செயாளா் வழக்குரைஞா் ஆா். தம்பிராஜ் முன்னிலை வகித்தாா்.
பட்டிமன்ற பேச்சாளா் புலவா் மா. ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினாா். தமிழ் எழுத்துகளை மிகச் சரியாக கையாள தெரிந்தவா் முன்னாள் முதல்வா்
மு. கருணாநிதி என்றும், அவரால்தான் தமிழ் திரையுலகில் எம்ஜிஆா் மற்றும் கண்ணதாசன் புகழ் உச்சத்துக்கு சென்றது எனவும் பேசிய அவா், கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு மற்றும் அவா் திரையுலகில் சாதனை குறித்தும் விளக்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு தோ்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப் பேரவை சாா்பில் ஊக்கத் தொகையாக ஒரு மாணவருக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்ப்பேரவை துணைத் தலைவா் சிவசண்முக வடிவேல், இணைச் செயலாளா் வைஜெயந்தி ராஜன், பொருளாளா் ஆசைத்தம்பி, மக்கள் தொடா்பாளா் ஆா். காளிதாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.