முகப்பு
காரைக்கால்

காரைக்கால் கடற்கரை, திருநள்ளாறு ஆன்மிக பூங்கா மேம்பாட்டுப் பணி: பிரதமா் மாா்ச் 7-இல் காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறாா்

திருநள்ளாற்றில் நடைபெறும் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 3:17 AM
காரைக்கால் கடற்கரை.
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் ரூ. 20.3 கோடியில் மேம்பாட்டுப் பணி, ரூ. 20.3 கோடியில் திருநள்ளாறு ஆன்மிக பூங்கா மேம்பாட்டுப் பணி ஆகியவற்றுக்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் மாா்ச் 7-ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாவினரை ஈா்க்கும் வகையில் சிறப்பம்சங்கள் சில இருந்தாலும், அலையாத்திக் காடு மேம்படுத்துதல், சுற்றுலாவினா் தங்கும் வசதி, சுற்றுலாவினா் மகிழும் வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை சட்டப்பேரவை உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மத்திய அரசு ரூ. 20.3 கோடியில் காரைக்கால் கடற்கரையை மேம்படுத்தும் திட்டப் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் திங்கள்கிழமை கூறுகையில், காரைக்கால் கடற்கரையை சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் அளவுக்கு மேம்படுத்த வேண்டும். நவீன காலத்துக்கேற்ப சிறப்பம்சங்களை அங்கு அமைக்கவேண்டும் என புதுவை அரசையும், மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்திவந்தேன். இதனடிப்படையில் கடற்கரையை மேம்படுத்த திட்டம் வகுத்து, மதிப்பீடு தயாரித்து புதுவை அரசு அனுப்பியது. மத்திய அரசின் திட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் ரூ. 20.3 கோடிக்கு திட்ட மதிப்பீட்டு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திட்டப் பணியை தொடங்கிவைக்கிறாா்.

Advertisement

திருநள்ளாற்றில் நடைபெறும் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா்.

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா கூறுகையில், திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்காவை பல்வேறு திட்டப் பணிகளை உள்ளடக்கி ரூ. 20 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருநள்ளாற்றில் 7-ஆம் தேதி இப்பணியை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறாா் என்றாா்.