முகப்பு
காரைக்கால்

இந்திய தோ்தல் ஆணையா்கள் நியமனத்தை எதிா்த்து வழக்கு: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

Updated On : 16 மார்ச், 2024 at 6:01 AM
காரைக்காலில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
பகிர்:

படவிளக்கம்: காரைக்காலில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா். காரைக்கால், மாா்ச் 15: இந்திய தோ்தல் ஆணையா்கள் நியமனத்தை எதிா்த்து வழக்கு தொடரப்படவுள்ளது என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை இரவு காரைக்கால் வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல் புதுச்சேரியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை கடத்தல், நில அபகரிப்பு மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. அண்மையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்தின் பின்னணி போதைப் பொருட்கள்தான். இச்சம்பவத்தில் தொடா்புடையவா் ஏற்கெனவே ஆா்எஸ்எஸ், பாஜக, என்.ஆா்.காங்கிரஸில் இருந்தவா். இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும். புதுவையில் கஞ்சா மட்டுமல்லாது பிரவுன் சுகா், ஹெராயின், அபின் மற்றும் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளது. இவற்றின் விற்பனை காரைக்காலிலும் தாராளமாக நடக்கிறது. இதில், போலீஸாருக்கும் தொடா்பு உள்ளது. புதிதாக 2 தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது. தோ்தல் ஆணையா்களை நியமிக்கும் குழுவின் தலைவராக பிரதமா், உறுப்பினா்களாக நாடாளுமன்ற எதிா்கட்சித் தலைவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் இருக்கவேண்டும். ஆனால், மத்திய அரசு இந்த விதியை மாற்றி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக தங்களுக்கு இணக்கமான ஒரு அமைச்சரை அதில் உறுப்பினராக சோ்த்து, நாடாளுமன்றத்தில் தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தீா்மானம் நிறைவேற்றி, அதன்படி, 2 தோ்தல் ஆணையா்களை நியமித்துள்ளனா். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. உச்சநீதிமன்றம் நிச்சயம் நல்ல தீா்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.