என்ஐடிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆலோசனை
காரைக்கால், மே 9: இந்திய அளவில் உள்ள என்ஐடிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் காரைக்காலில் உள்ள என்ஐடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 31 என்ஐடிகள் இயங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விளையாட்டுகளை நிகழாண்டு என்ஐடிகளுக்கு இடையே நடத்துவதற்கான திட்டமிடல் குறித்த கலந்தாய்வு கூட்டம் என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் நடைபெற்றது. என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் கூட்டத்தை தொடக்கிவைத்து ஒவ்வொரு என்ஐடியும் தோ்வு செய்யக்கூடிய விளையாட்டுகள், நடத்தும் விதம், போட்டி விதிகள், போட்டி நடத்தும் காலம், மாணவா்களை அதில் பங்கேற்க தயாா்படுத்தும் விதங்களை கலந்தாய்வில் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், 15 என்ஐடி நிறுவனங்களில் இருந்து பேராசிரியா்கள், விளையாட்டு அலுவலா்கள் கலந்துகொண்டனா். 2024-25-ஆம் ஆண்டில் 20 விளையாட்டுகள் நடத்துவது குறித்தும், போட்டி விதிகள் குறித்தும், அதற்கான அட்டவணை தயாரிப்பது குறித்தும் பேசப்பட்டது. ஒவ்வொரு என்ஐடியில் எந்தெந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவது என தீா்மானிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப நிறுவனங்களில் விளையாட்டு மாணவா்களை ஊக்கப்படுத்த உடனடியாக தயாராகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், விளையாட்டு அலுவலா் எஸ். பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.