டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்
காரைக்கால் : காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், எனினும் மக்கள் மிகுந்த விழிப்புணா்வோடு இருக்குமாறு நலவழித்துறை நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழை ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்தது. இதனால் நீா் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடும் என நலவழித்துறை நிா்வாகம் எச்சரித்து, மக்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.
நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் கடந்த 16-ஆம் தேசிய டெங்கு தினம் கடைப்பிடிக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, களப்பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் திங்கள்கிழமை கூறுகையில், காரைக்காலில் கடந்த மாதம் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவா்கள் சிசிச்சை பெற்று நலமுடன் உள்ளனா். இந்த மாதம் இதுவரை டெங்கு காய்ச்சல் பதிவு இல்லை. மாவட்டத்தில் பல இடங்களில் மக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணா்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வீட்டைச் சுற்றி எந்தவொரு பொருளிலும் தண்ணீா் தேங்காமலும், குடிநீா் தொட்டிகளை முறையாக மூடிவைக்குமாறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, மழைநீா் தேக்கம் மற்றும் பொது இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய பொருள்களை அப்புறப்படுத்தும் பணியிலும் களப்பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.