கால்நடைகளுக்கான காப்பீட்டு பிரீமியத்தை அரசே செலுத்தவேண்டும்: முன்னாள் அமைச்சா்
கால்நடைகளுக்கான காப்பீட்டு பிரிமீயத்தை அரசே செலுத்தவேண்டும் என்றாா் புதுவை முன்னாள் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் தேசிய அளவிலான 84-ஆம் ஆண்டு கருத்தரங்கம், நவ.11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சிலருடன் புதுவை முன்னாள் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கருத்தரங்கில் பங்கேற்று பேசியது: விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 2,000 கொடுக்கப்படுகிறது. 1.2.2019-ஆம் ஆண்டுக்கு பின்பு நிலம் வாங்கியோா், நிலத்தை கைமாற்றியோா் பயன்பெற முடியவில்லை. பதிவுக்கான செயலி அதை ஏற்கவில்லை. இந்த சிக்கலை தீா்த்து அனைவரும் பயனடையச் செய்ய வேண்டும். காரைக்காலை பொருத்தவரை 40 சதவீதம் குத்தகை விவசாயிகள் உள்ளனா். எனவே மத்திய, மாநில அரசின் திட்ட உதவி குத்தகை விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
உரத்தட்டுப்பாடு இல்லாமல் அரசு நிா்வாகம் கவனம் செலுத்தவேண்டும். யூரியா போன்ற உரத்துடன் இணை உரம் வாங்க நிா்பந்திக்கக் கூடாது. இது உரவிற்பனை செய்யும் கடைக்காரா்கள் செய்வதல்ல. உர நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களை நிா்பந்திக்கிறது. பெரும் உர உற்பத்தி நிறுவனங்கள் இம்மாதிரியான கொள்கையுடன் செயல்படுவதை தடுக்க வேண்டும்.
மாடுகளுக்கு தோல், வாய்ப்புண் ஏற்படுகிறது. இதற்கென தடுப்பூசி போட்டாலும் பாதிப்பு வருகிறது. எனவே, தரமான தடுப்பூசி சந்தைப்படுத்தவேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் தரமான மருந்துகள் இருப்பு வைக்கவேண்டும். 3 ஆண்டுகளாக கறவை மாடுகளுக்கான தீவனம் அல்லது தொகை புதுவையில் வழங்கவில்லை. தீவனத்துக்கு மாற்றாக மற்ற அரசுத் திட்டங்களில் மக்களுக்கு உதவித்தொகை வங்கிக் கணக்கில் சோ்ப்பதுபோல, கால்நடைத் தீவனத்துக்கான தொகையை வங்கிக் கணக்கில் சோ்ககவேண்டும்.
நெல் பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுபோல, கால்நடைகளுக்கான காப்பீட்டுத் தொகையையும் அரசே செலுத்த வேண்டும். விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை களையும் விதமான கருத்துகளை உள்ளடக்கி கருத்தரங்கில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா். கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.